search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் கண்ணாடி உடைப்பு"

    • கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர்.
    • காரில் உள்ள இருக்கையில் இருந்த ஐபோனை கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது.

    காஞ்சிபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் பட்டு சேலை எடுக்க 2 கார்களில் காஞ்சிபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு சேலை கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு 4 பட்டு சேலைகளை வாங்கி விட்டு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அவர்கள் கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர். சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்தபோது ஒரு காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 4 பட்டு சேலைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.

    காரில் உள்ள இருக்கையில் இருந்த ஐபோனை கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது. திருமணத்திற்கு எடுத்த பட்டுச்சேலைகள் கொள்ளை போனதால் திருமண விட்டார் சோகம் அடைந்தனர்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தில் மளிகை கடை செயல்பட்டு வருகிறது.
    • கடன் பாக்கி குறித்து கேட்டபோது மளிகை கடைக்காரர்கள் இவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தில் மளிகை கடை செயல்பட்டு வருகிறது.

    மளிகை கடைக்கு சீனிவாசன் என்பவர் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சப்ளை செய்த அரிசி மூட்டைகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக பணம் தராமல் கடைக்காரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் நேற்று மாலை கடன் பாக்கியை கேட்பதற்காக சீனிவாசன் தனது காரில் வந்துள்ளார்.

    கடன் பாக்கி குறித்து கேட்டபோது மளிகை கடைக்காரர்கள் இவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் சீனிவாசன் வந்த காரின் கண்ணாடியை உடைத்து அவரை தாக்கிதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை கிராமம். இங்குள்ள நோவா நகரில் தனது மகன் பிரபாகரனுடன் ஒரே குடும்பமாக வசித்து வருபவர் தடா பெரியசாமி (வயது 61).

    இவர் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக தடா பெரியசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். மேலும் ஒரு அறக்கட்டளை நிர்வாகியாகவும் உள்ளார்.

    இதற்கிடையே சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறான சில தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனும் தடா பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர் வெளியிட்டு இருந்த வீடியோவில், திருமாவளவன் குறித்து பேச தடா பெரியசாமிக்கு எந்தவித தகுதியும் கிடையாது. அதையும் மீறி அவர் பேசிய அவதூறு பேச்சுக்கு தகுந்த தண்டணையை விரைவில் அனுபவிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை வெளியில் சென்ற தடா பெரியசாமி பெரம்பலூரில் பல்வேறு கட்சி பணிகளை மேற்கொண்டார். பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான இன்னோவா காரை நிறுத்தியிருந்தார். அருகிலேயே இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இரவு சுமார் 11 மணியளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் பெயர், விபரம் தெரியாத 7 பேர் வந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும், கிராமம் என்பதாலும் யாரும் அதனை முதலில் அறிந்திருக்கவில்லை.

    பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர் தடா பெரிசாமியின் கார் மீது பாறாங்கற்களை வீசினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் காரை சரமாரியாக அடித்து உடைத்தனர். அத்துடன் காரின் டயர்களை கத்தியால் குத்தி கிழித்தனர். இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

    சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர கதவை திறந்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை வெளியே வரவிடாமல் தடுக்கும் வகையில், வீட்டின் மீதும் சரமாரியாக கருங்கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இந்த கல் வீச்சில் தடா பெரியசாமியின் பேரன் அதிரந்தன் (4) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தடா பெரியசாமி மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் தனது காரையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். 

    • கும்பல் எதற்காக வந்தது? ஏன் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர்? என்பது தெரியவில்லை.
    • குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    மதுரை:

    மதுரை யாகப்பாநகர் விவேகானந்தர் 5-வது தெருவில் நேற்று நள்ளிரவு 5 பேர் கும்பல் வந்தது. குடிபோதையில் இருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் மீது பெரிய கற்களை வீசினர்.

    இதில் அந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. கற்களை வீசி கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விழித்தெழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது 5 பேர் கும்பல், கார் கண்ணாடிகளை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள், 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று சத்தம் போட்டனர். அதற்கு அந்த கும்பல், 'ஒழுங்கு மரியாதையாக சென்று விடுங்கள். இல்லை எனில் உங்களையும் அடித்துக் கொன்று விடுவோம்' என்று மிரட்டியது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் சென்று விட்டனர்.

    மர்ம கும்பல் ரகளை குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    அந்த கும்பல் எதற்காக வந்தது? ஏன் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர்? என்பது தெரியவில்லை. குடிபோதையில் அவ்வாறு ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த கும்பலை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரை யாகப்பா நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்மகும்பல் 10-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளை கற்களை வீசி உடைத்தது. அந்த கும்பல் இதுவரை போலீசில் சிக்கவில்லை.

    அண்ணாநகர் பகுதியில் சமூக விரோத கும்பல் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளை செய்து வரும் சமூக விரோத கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜி.என்.செட்டி ரோட்டை ஒட்டியுள்ள சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இருவரும் அடித்து நொறுக்கினர்.
    • இருவரும் சேர்ந்து 20 கார்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்திருப்பதாக புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் தியாகராய சாலை பகுதியில் தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போதையில் கார், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போதையில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் போதை தெளிந்த பிறகு காலையில் வந்து மோட்டார் சைக்கிளை வாங்கி செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு நடந்து சென்றனர்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருவரும் அத்துமீறி நடந்து கொண்டனர். ஜி.என்.செட்டி ரோட்டை ஒட்டியுள்ள சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இருவரும் அடித்து நொறுக்கினர்.

    ரோட்டில் கிடந்த கற்கள் மற்றும் கட்டைகளை எடுத்து ஆவேசமாக கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போதை தலைக்கேறிய நிலையில் 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை இருவரும் அடித்து நொறுக்கினார்கள். காலையில் தங்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பாண்டிபஜார் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போதை ஆசாமிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போதை ஆசாமிகளில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவை சேர்ந்த ராகுல் வளவன் என்பதும் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

    அங்கிருந்து தப்பிய அவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது ராகுல் வளவனுடன் வந்த நபர் தர்மின்ராஜ் என்பதும் இவர் மலேசியாவில் பணி செய்துவிட்டு தற்போது சென்னைக்கு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இருவரும் சேர்ந்து 20 கார்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்திருப்பதாக புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பல கார்களை அவர்கள் சேதப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஆர்.கே. செல்வமணி வீட்டின் அருகே உள்ள அபுசாலி சாலையில் அவரது காரை டிரைவர் பாலமுருகன் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார்.
    • சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு டிரைவர் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    பிரபல சினிமா டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. இவர் பெப்சி அமைப்பின் தலை ராகவும், டைரக்டர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இவரது வீடு மற்றும் அலுவலகம் சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ளது. நேற்று மாலை ஆர்.கே. செல்வமணி வீட்டின் அருகே உள்ள அபுசாலி சாலையில் அவரது காரை டிரைவர் பாலமுருகன் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு டிரைவர் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் கல்லால் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கிவிட்டு தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அந்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஈரோடு ஸ்டோனிபாலம் ஈ.வி.என்.ரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
    • சிறுவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோட:

    ஈரோடு ஸ்டோனிபாலம் ஈ.வி.என்.ரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால் இரவு, பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சாலையோரமாக நின்றிருந்த சிறுவர்கள் சிலர் திடீரென அந்த வழியாக சென்ற வாகனங்களின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக அந்த வழியாக சென்ற கார்களின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

    இதில் 5 கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    போலீஸ் வருவதை அறிந்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் சில சிறுவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களின் மீது கல்வீசி தாக்குதல் சில நாட்களாக நடந்து வருகிறது.

    இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் 16 முதல் 18 வயது உடையவராக இருக்கிறார்கள். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×